Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Thursday, June 18, 2015

உங்கள் விரல் நுனியில் சென்னை பேருந்து, ரயில் தகவல்களை தரும் ராப்ட் கைபேசி செயலி(Raft Mobile App)

எந்த பேருந்து, எந்த இடத்திற்கு போகும் என்பது தெரியாமல் குழம்புபவர்கள் நிறைய பேர் உண்டு. பேருந்து நிறுத்தத்தில் பக்கத்தில் இருப்பவர்களை கேட்டால், பெரும்பாலும், 'தெர்ல...' என்று தான் பதில் வரும். இந்த நிலையில், சென்னையில் திக்குத் தெரியாமல் தவிப்பவர்களுக்கு உதவ, ஒரு கைபேசி செயலி வந்திருக்கிறது.

ஐ.ஐ.டி-., மெட்ராஸ் பட்டதாரிகளான சித்தார்த், அகிலேஷ் மற்றும் கிருஷ்ணா ஆகிய மூவரும், இந்த செயலியை உருவாக்கி இருக்கின்றனர். ஐ.ஐ.டி.,யில் இயங்கிவரும் ஆராய்ச்சிப் பூங்காவின் தொழில்முனைவு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், இந்த செயலியை அவர்கள் மூவரும் உருவாக்கியிருக்கின்றனர்.
ராப்ட் (Raft) என்ற இந்த செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும், சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகள் மற்றும் உள்ளூர் ரயில்களின் வழித்தடங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ராப்ட் கைபேசி செயலி(Raft Mobile App)
ராப்ட் கைபேசி செயலி(Raft Mobile App)

'ஏற்கனவே கூகுள் மேப்ஸ் உட்பட சில செயலிகள் சென்னைவாசிகளுக்கு உதவினாலும், எங்களுடைய, 'ராப்ட்' செயலி மிக சமீபத்திய தகவல்களுடன் இயக்கப்படுகிறது என்பது முக்கியமான வித்தியாசம். 10 பேர் கொண்ட எங்கள் அணி, பல இடங்களுக்கு நேரில் போய் பார்த்து, தகவல்களின் துல்லியத்தை மேம்படுத்தியபடி இருக்கிறோம்' என்கிறார், ராப்டின் இணை நிறுவனர்களில் ஒருவரான சித்தார்த்.

கடந்த, டிசம்பர், 2014ல் வெளிவந்த இந்த செயலிக்காக, ஆறு மாதங்களாக, சென்னையின், 6,500 பேருந்து நிறுத்தங்கள், 1,500 பேருந்து வழித்தடங்களை செயலியில் பதிந்திருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன் சென்னை மாநகர பேருந்து, 50 வழித்தட எண்களை மாற்றியது. 'நாங்கள் உடனே அந்த தகவலை எங்கள் செயலியில் ஏற்றி விட்டோம். ஆனால், கூகுள் மேப்ஸ் தளம் இன்னும் பழைய பஸ் ரூட்களையே காட்டிக் கொண்டிருக்கிறது' என்கிறார் சித்தார்த்.

ராப்டின் மூவரணியின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. இணையத்திலுள்ள, கூகுள் ப்ளே ஸ்டோரில், இலவசமாக கிடைக்கும் ராப்ட் செயலியை, இதுவரை, 75 ஆயிரம் பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். 'இதுவரை 1,800 பேருக்கும் மேற்பட்ட பயனாளிகள், 4.6 நட்சத்திர மதிப்பீடு தந்திருப்பதே எங்கள் செயலியின் தரத்திற்கு சான்று. வேறு எந்த சென்னை போக்குவரத்து செயலிக்கும், இவ்வளவு உயர்ந்த நட்சத்திர மதிப்பீடு கிடைத்ததில்லை' என்கிறார் சித்தார்த்.

No comments:

Post a Comment