Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Thursday, October 15, 2015

கணினிகளிடம் இருந்து கண்களை காத்துக் கொள்ளுங்கள்

கணினிகளிடம் இருந்து கண்களை காத்துக் கொள்ளுங்கள்!
***************************************************************************************
அதிக நேரம் டி.வி. பார்ப்பதும் நல்லதல்ல. அந்த நேரத்தில் கண்களில் அதிக ரத்த ஓட்டம் இருக்கும். அதனால் டி.வி. பார்க்கும்போது கண் சம்பந்தப்பட்ட நரம்பு செயலிழந்து விட வாய்ப்புண்டு. குடித்துவிட்டு டி.வி. பார்ப்பதென்பது, எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவதுபோல ஆகும்.

அடிக்கடி சேனலை மாற்றிக் கொண்டு இருப்பதும் கண்ணுக்கு நல்லதல்ல. ஒரு சேனலிலிருந்து இன்னொரு சேனலுக்கு மாறும்போது முதலில் ஒரு நொடி இருட்டும், அடுத்த நொடி அதிக வெளிச்சமும் ஏற்படும். இது கண் உறுப்புக்களைத் தூண்டித் தூண்டி பார்க்கச் செய்து கண்களை சீக்கிரமே சோர்வடைய வைக்கிறது.
இதைத் தடுக்க சேனலை மாற்றாமல், ஒரே சேனலையே பாருங்கள் என்று சொன்னால், யாராவது கேட்பார்களா? கண்டிப்பாக கேட்க மாட்டார்கள். கண் பாதிக்காமல் சேனலை மாற்றி மாற்றிப் பார்க்க ஒரு புதிய வழியை சொல்கிறேன், செய்து பாருங்கள். சேனலை மாற்றுவதாக இருந்தால் முதலில் கண்ணை ஒரு நொடி மூடி வைத்துக்கொண்டு சேனலை மாற்ற ரிமோட்டை அழுத்துங்கள்.
சேனலை மாற்றியபிறகு, கண்களை நான்கைந்து முறை மூடி திறந்து மூடி திறந்து பாருங்கள். அதற்கப்புறம், ஒது பத்து முறையாவது கண்ணை சிமிட்டிவிட்டு அதற்கப்புறம் டி.வி.யைப் பார்க்க ஆரம்பியுங்கள். இந்த மாதிரி செய்தால் கண்ணுக்கு ஓரளவு களைப்பு ஏற்படாது. வெளியூர் செல்லும் பஸ்களில் இப்பொழுதெல்லாம் டி.வி. கண்டிப்பாக இருக்கிறது.
இந்த டி.வி.யை ரொம்ப கிட்டத்தில் உட்கார்ந்து கொண்டு, ரொம்ப பின்னாடி உட்கார்ந்து கொண்டு, ஓரங்களில் உட்கார்ந்து கொண்டு, எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருப்பது கண்ணுக்கு நல்லதல்ல. அடுத்து டி.வி. ஸ்கிரீன் அகலத்தை மாதிரி, குறைந்தது 7 மடங்காவது தள்ளி உட்கார்ந்துதான் டி.வி. பார்க்க வேண்டும். அதுவும் பஸ்ஸில் முடியாது.
அதற்கும்மேல், பஸ் ஆடிக்கொண்டே போவதால் டி.வி. ஒழுங்காகத் தெரியாது. இதுவும் கண்ணுக்கு கெடுதியே. எனவே பஸ்சில் டி.வி. பார்ப்பதைத் தவிர்த்து கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பது அல்லது தூங்குவது கண்ணுக்கு ரொம்ப நல்லது. "நாம் பார்க்கும் பொருள், அதிக வெளிச்சத்தில் இருந்தாலும் கண்ணுக்கு நல்லதல்ல.
மிகக் குறைவான வெளிச்சத்தில் இருந்தாலும் கண்ணுக்கு நல்லதல்ல'' என்று டெலிவிஷன் ஒளியைப் பற்றிய ஆய்வுகளை தொடரும் ஜான் புல்லோ என்கிற விஞ்ஞானி சொல்கிறார். `நான் 20 வருஷமா இருட்டு அறையிலே உட்கார்ந்துதான் டி.வி. பார்க்கிறேன், எனக்கு கண் ஒண்ணும் ஆகலையே. நல்லாத்தானே இருக்கு?' என்று சிலர் சொல்லலாம். நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன்.
வெளித்தோற்றத்திற்கு எல்லோருடைய கண்களும் நன்றாக இருப்பதுபோல்தான் தோன்றும், டெஸ்ட் பண்ணிப் பார்த்த பிறகுதான் உங்களுக்கு கண் பாதிக்கப்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பதைச் சொல்ல முடியும். செல்போனைப்போல கம்ப்யூட்டரும் இன்றைய உலகில் மிக மிக முக்கிய தேவையான பொருளாக ஆகி விட்டது.
கம்ப்யூட்டர் இல்லாத வீடே இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு இன்றைய உலகம் முன்னேறி வருகிறது. கம்ப்யூட்டர் உபயோகிக்காத மனிதர்கள் குறைவென்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு மனிதனோடு சேர்ந்த ஒரு பொருளாக கம்ப்யூட்டர் மாறிவிட்டது. இந்த கம்ப்யூட்டர் உபயோகம், கண்ணை எப்படிப் பாதிக்கிறது என்று தெரியாமலே பல பேர் கம்ப்யூட்டரோடு படுத்து உறங்குகிறார்கள்.
பெரிய பெரிய ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், காலையிலிருந்து இரவு வரை அதிக நேரம் கம்ப்யூட்டரைப் பார்த்துதான் ஆக வேண்டும். பார்க்கமாட்டேன் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் ஐ.டி. கம்பெனிக்காரர்கள் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று சம்பளம் கொடுக்கும்போது கண்டிப்பாக அவர்கள் சொல்கிற வேலையை செய்துதான் ஆக வேண்டும்.
`கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்` (சி.வி.எஸ்.) என்று சொல்லக்கூடிய ஒரு பாதிப்பு கம்ப்யூட்டரில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது. கண்ணில் எரிச்சல், கண்ணில் அரிப்பு, கண் காய்ந்து போய்விடுவது, கண்ணில் நீர் வடிவது, கண் இறுக்கமாக இருப்பது, கண்ணைச் சுற்றி லேசான வீக்கம் இவையெல்லாம் இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமின் அறிகுறிகளாகும்.
இதற்கு முதல் காரணமும், முக்கிய காரணமும் என்னவென்று பார்த்தால், கம்ப்யூட்டரில் உட்கார்ந்து நாம் வேலை செய்யும்போது கண்களை சிமிட்டுவது மிக மிகக் குறைந்துவிடுவதுதான் என்று தெரியவருகிறது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் பத்து மணி நேரம் போக ஒரு நாளைக்கு சுமார் 10080 முறை (14 மணி நேரத்திற்கு) கண் சிமிட்ட வேண்டும்.
கம்ப்யூட்டரில் உட்கார்ந்து வேலை செய்யும்போது கண் சிமிட்டுவது குறைந்துவிடுவதால் கண்ணீர் சுரப்பது குறைந்து விடுகிறது. இதனால் கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது. மேலும் கண் திறந்தே இருப்பதால் சுரக்கும் கண்ணீரும் வேக வேகமாக காற்றில் ஆவியாகி விடுகிறது. இதனால் கண் அங்கும் இங்கும் நகருவதும் கஷ்டமாகி விடுகிறது.
கணினிகளிடம் இருந்து கண்களை காத்துக் கொள்ளுங்கள்
கணினிகளிடம் இருந்து கண்களை காத்துக் கொள்ளுங்கள்


இதை சரி பண்ண நாம் என்ன பண்ண வேண்டும்?
************************************************************************** 
1. கம்ப்யூட்டர் மானிட்டர் மீது வேறு வெளிச்சம் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வேறு வெளிச்சம் மானிட்டர் மீது படுவதாக இருந்தால் மானிட்டரை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் திருப்பி, அட்ஜஸ்ட் செய்து வெளி வெளிச்சமோ, வேறு வெளிச்சமோ படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த வெளிச்சம் மற்றும் அதிக வெளிச்சத்தை குறைப்பதற்கென்றே ஒரு ஸ்பெஷல் கண்ணாடி ஸ்கிரீன் விற்கிறது. இதை வாங்கி உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டருக்கு முன்னால் மாட்டிக்கொள்ளுங்கள்.

2. கம்ப்யூட்டரும், நீங்கள் உட்காரும் நாற்காலியும் சரியான உயரத்தில் இருக்க வேண்டும். நாற்காலி, நல்ல நாற்காலியாக இருக்க வேண்டும். நாற்காலியில் சவுகரியமாக திருப்தியாக உட்கார்ந்தால்தான் கம்ப்யூட்டரில் அதிக கவனம் செலுத்த முடியும். நாற்காலி சரியாக இல்லாவிட்டால் கவனம் குறைந்து விடும். வேகமாக வேலையை பார்க்க முடியாது. முதுகுவலி வந்து விடும். கழுத்துவலி வந்து விடும், கவனமாக இருங்கள். உங்கள் கண்களில் இருந்து சுமார் 35 செ.மீ. முதல் சுமார் 50 செ.மீ. தூரம் தள்ளி, கம்ப்யூட்டர் மானிட்டர் இருக்க வேண்டும். அதாவது உங்களுக்கும், மானிட்டருக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும்.
3. தொடர்ந்து மானிட்டரைப் பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் தலைவலி, மங்கலான பார்வை இவைகள் வராமலிருக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு பின் கண்ணை நன்றாக கழுவிவிட்டு மறுபடியும் வேலையைத் தொடருங்கள். அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 நிமிடம், உங்கள் நாற்காலியிலிருந்து எழுந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்து மறுபடியும் உட்காருங்கள்.
4.தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது இடைஇடையில் மானிட்டரிலிருந்து கண்ணை எடுத்து அருகிலுள்ள ஜன்னல் வழியாக, வெளியே ஒரு முறை பார்த்துவிட்டு, மறுபடியும் மானிட்டரைப் பார்க்க ஆரம்பியுங்கள்.
5. ஏற்கனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள், மானிட்டரிலிருந்து சுமார்
70-லிருந்து சுமார் 80 செ.மீ. தூரத்தில் உட்காரலாம்.

6. கம்ப்யூட்டரில் உள்ள எழுத்துகளின் அளவை முடிந்தவரை பெரிதாக்கிப் பாருங்கள். கண்ணுக்கு அதிக அசதி இருக்காது. எப்படி வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ளுங்கள் என்று ஊறுகாய்க்கு டிவி.யில் விளம்பரம் வருவதுபோல, எப்படி வேண்டுமானாலும் டி.வி.யிலும், கம்ப்யூட்டரிலும் உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் கண்ணுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment