Vellore Information - Online Advertising Agencies and SEO Services in Vellore

Friday, August 19, 2016

ரியோ ஒலிம்பிக் போட்டி : இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுக் கொடுத்த மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுக் கொடுத்த மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் 12 ஆண்டுகால கடின உழைப்புக்கு கிடைத்த முடிவு தான் இந்த வெண்கலப் பதக்கம் என கூறியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் பெற்றுக் கொடுத்தார். பெண்களுக்கான 58 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் அரியானவை சேர்ந்த அவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது குறித்து சாக்சி மாலிக் நிருபர்களிடம் கூறியதாவது:

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் எனது கனவு நனவானது. இந்த சாதனையை நினைத்து பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் இது மறக்க முடியாத தருணமாகும்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனையாக நானாக இருப்பேன் என்பதை நினைத்து பார்க்கவில்லை. மற்ற மல்யுத்த வீரர்களும் பதக்கங்களை பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

12 ஆண்டுகால கடின உழைப்புக்கு கிடைத்த முடிவு தான் இந்த வெண்கலப் பதக்கம். இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததை நினைத்து நான் மிகவும் சந்தோ‌ஷம் அடைகிறேன். என் மீது அன்பையும், பாராட்டையும் வெளிப்படுத்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக் வெண்கல பதக்கத்தை எனது குடும்பத்தினர் மற்றும் எனது பயிற்சியாளர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



                                                        மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்

சாக்சி மாலிக் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றதால் அவரது பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தனது மகள் நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளதாக அவரது தாயார் சகேஷ் கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் பெற்றுக் கொடுத்த சாக்சி மாலிக்கிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

இதில் இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் வில்வித்தை, தடகளம், டென் னிஸ், டேபிள் டென் னிஸ், துப்பாக்கி சுடுதல், பேட் மின்டன், குத்துச் சண்டை, மல்யுத்தம், நீச்சல், கோல்ப், ஜிம்னாஸ்டிக், துடுப்பு படகு, ஆக்கி, ஜூடோ, பளு தூக்குதல் ஆகிய 15 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே நாள் தோறும் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா? என்ற ஆவலில் ரசிகர்கள் இருந்தனர். 11-ம் நாள் போட்டி முடிவு வரை பதக்கம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், குத்துச்சண்டை, வில்வித்தை போன்ற விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினர். துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கரம்கர், டென்னிசில் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடியினர் மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டனர்.

இந்த நிலையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 12-வது நாளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்தது.

மல்யுத்தப் போட்டியில் வெண்கல பதக்கம் கிடைத்தது. பெண்களுக்கான 58 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் சாக்சி மாலிக் பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். பெண் ஒருவர் மூலமே இந்தியாவுக்கு இந்த ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் கிடைத்தது.

சாக்சி மாலிக் தொடக்க சுற்றில் சுவீடனை சேர்ந்த ஜோகன்னா மேடிசனை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் மால்டோவா வீராங்கனை மரியானா செர்டிவாராவை தோற்கடித்தார்.

இந்த ஆட்டம் 5-5 என்ற கணக்கில் சமநிலை பெற்றது. டெக்னிக்கல் புள்ளி முறையில் அவர் வென்றார். ஆனால் சாக்சி காலிறுதியில் 2-9 என்ற கணக்கில் ரஷியாவை சேர்ந்த வெலேரியா கோப்லோவாவிடம் தோற்றார். தோல்வியை தழுவினாலும், வெலேரியா பைனலுக்கு முன்னேறியதால் ரீபேஜ் முறையில் சாக்சிக்கு வாய்ப்பு இருந்தது. ரீபேஜ் ரவுண்டில் 12-3 என்ற கணக்கில் ஒர்கான் பியூர்டேஜ்ஜை (மங்கோலியா) தோற்கடித்து வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதை தொடர்ந்து நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சாக்சி மாலிக் கிர்கிஸ்தான் வீராங்கனை அய்சூலு டைனி பெகோவாவை சந்தித்தார். இதில் அவர் 8-5 என்ற புள்ளிக்கணக்கில் வென்று வெண்கல பதக்கம் பெற்றார்.

இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் சாக்சி 0-5 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். போட்டி முடிய சில நிமிடங்களே இருந்ததால் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சாக்சி மிகவும் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை பெற்றார்.

முதலில் 5-5 என்ற சமநிலையை பெற்றார். போட்டி முடிய சில வினாடிகள் இருந்தபோது சாக்சி அபாரமாக செயல்பட்டு மேலும் 3 புள்ளிகளை பெற்று வெண்கலம் வென்று இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்டார். தோல்வி நிலையில் இருந்து மீண்டு திறமையுடன் செயல்பட்டு சாக்சி பதக்கம் பெற்றுக் கொடுத்து புதிய வரலாறு படைத்தார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 4-வது இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் ஆவார். இதற்கு முன்பு கர்ணம் மல்லேஸ்வரி (பளு தூக்குதல், 2000), மேரி கோம் (குத்துச்சண்டை, 2012), சாய்னா நேவால் (பேட்மின்டன், 2012) ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்று இருந்தனர்.

மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். இதற்கு முன்பு மல்யுத்த வீரர்கள் கசாபா யாதவ், சுசில்குமார், யோகேஷ்வர் தத் ஆகியோர் பதக்கம் பெற்றுக்கொடுத்தனர்.

ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த 5-வது பதக்கம் ஆகும். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் 25-வது பதக்கம் இதுவாகும்.

இந்த வெண்கல பதக்கம் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க பட்டியலில் இடம் பிடித்தது. பதக்க பட்டியலில் இந்தியா தற்போது 70-வது இடத்தில் உள்ளது.

சாக்சி மாலிக் ஒலிம்பிக்கில் வெண்கலம் பெற்றுக்கொடுத்ததன் மூலம் நாடே குதூகலம் அடைந்துள்ளது. 120 கோடி இந்தியர்களுக்கு பெருமை தேடிக்கொடுத்த 23 வயதான அவர் அரியானா மாநிலம் ரோத்தக்கை சேர்ந்தவர்.

2014-ம் ஆண்டு காமன் வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளியும், 2015 தோகா ஆசிய விளையாட்டில் வெண்கலமும் பெற்று இருந்தார். தற்போது ஒலிம்பிக் பதக்கம் பெற்றதன் மூலம் அவர் மேலும் ஒரு மைல்கல்லை தொட்டார்.

ரியோ ஒலிம்பிக்கில் பதக்க தாகத்தை தீர்த்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த சாக்சிக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிக்கின்றன.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய விளையாட்டு மந்திரி கோயல், முன்னாள் மத்திய விளையாட்டு மந்திரி அஜய்மக்கான் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment